விவாகரத்து கூறி நிற்கும் மணமக்களே சற்று சிந்தியுங்கள்...
இரு மனங்களின் சங்கமம் ,ஆயிரம் காலத்து பயிர், சொர்க்கத்தில் நிச்சயிக்கப்பட்ட திருமணம் என்றெல்லாம் சொல்லப்படும் திருமணங்கள் முறியலாமா????
விவாகரத்து ஏற்படுவதற்கான காரணங்கள்
தேவைகேற்ப வேலை வாய்புகள்,கைநிறைய சம்பளம் கட்டுபாடற்ற சுதந்திரம் கண்டதும் காதல் ,அடுத்து கல்யாணமென இளம் தலைமுறையினர் எந்தளவு வேகமாக திருமண பந்தத்தில் நுழைகின்றனரோ அதனைவிட வேகமாக அதனை உடைத்துக்கொண்டு வெளிவந்து விவாகரத்து கூறிநிற்பதை இப்போது அதிகமாக காணக்கூடியதாக உள்ளது.
இவ் விவாகரத்துக்கு பொருளாதாரம் ,துணைவர்களின் சமூக அந்தஸ்து , திருமணதிட்கு புறம்பான உறவு, கூட்டுக்குடும்ப வாழ்க்கை , பாலியல் பலவீனங்கள் , திருமணம் மூலம் ஏற்படுகின்ற கட்டுபாடுகள் போன்றவையே காரணமாகின்றன.
கூட்டுக்குடும்ப அமைப்பு , கணவன் , மனைவி என்ற கண்ணியமான உறவு , கட்டுபாடான வாழ்க்கை , கலாச்சாரம் , பண்பாடு என்றிருந்த எம்மவரின் வாழ்கை எந்திரமயமான உலகின் சூழலில் சிக்கி நிலையற்ற குடும்ப அமைப்பாகவும் கட்டுபாடற்ற வாழ்க்கை முறையை கொண்டதாகவும் மாறியதினாலேயே ஆயிரம் காலத்து பயிரான திருமணங்கள் அற்ப ஆயுளிலேயே கருகிபோகும் அவல நிலை ஏற்பட்டுள்ளது.
கணவன் மனைவி இருவரும் வேலைக்கு செல்வதால் ஒருவரை ஒருவர் நன்றாகபுரிந்து கொள்வதற்கான நேரமும் மிக குறைவாக இருப்பதுடன் அந்தஸ்துகள் காரணமாக விட்டுகொட்டுக்கும் மனப்பான்மையும் குறைந்து விட்டது . இவர்களில் பலர் பிடிவாதம் நிறைந்தவர்களாகவே காணப்டுகின்றனர்.
திருமணம் செய்யும் ஒவோருவரும் எதிர்பர்புகளுடனும் எராளமான கனவுகளுடனும் தங்கள் இல்லற வாழ்க்கையை ஆரம்பிக்கின்றனர். இந்த எதிர்பார்ப்புகள், கனவுகள் சின்ன சின்ன பிரச்சினைகளால் சிதைவடையும் போது ஒருவருக்கொருவர் கருத்து வேறுபாடுகள் ஏற்படுகின்றன. இது விவாகரத்து வரைகொண்டு செல்கின்றது.
இன்றைய அவசர உலகில் காலை முதல் இரவு வரை வேலை செய்வதால் கணவன் -மனைவி தங்களின் உணர்வுகளையும் எண்ணங்களையும் பகிர்ந்து கொள்ளமுடியாமல் போகின்றது . உணர்வுகளை மட்டுமில்லாமல் அவர்களிடம் ஏற்படும் சிறு பிரச்சினைகளை கூட தீர்த்து கொள்ள முடியாமல் போகின்றது. இதனால் சிறு பிரச்சினை கூட பூதாகரமாக மாறி விவாகரத்து வரை செல்கின்றது.
மேலும் இருவரும் வேலைக்கு செல்லும் கணவன் மனைவியாக இருந்தால் இருவரும் பொருளாதரத்தில் சமபலத்தில் இருப்பர். இதனால் உன்னை நம்பி நான் இல்லை என்ற சுய கௌரவம் வந்து விடுவதால் தமக்கிடையில் பிரச்சினைகள், மனவேறுபாடுகள் ஏற்படும் போது தமது பிரச்சினைகளை பெரியவர்களிடம் கூட கூறாது பிரிந்துவிடுவோம் என முடிவெடுத்து விவகாரத்தினை நாடுகின்றனர் .இதனால் சமரசம் மூலம் தீர்க்க கூடிய பிரச்சினை கூட தீர்க்கமுடியாமல் போய் விடுகின்றது.
தாம் விவாகரத்து செய்து விட்டால் தமது பிள்ளைகளின் எதிர்காலம் என்னவென்று யோசிப்பதற்கு கூட இவர்கள் தயாரில்லை. நீதிமன்றத்தில் தான் பிள்ளையின் எதிர்காலம் தீர்மானிக்கபடுகின்றது. தாயுடன் பிள்ளை இருப்பதா தந்தையுடன் பிள்ளை இருப்பதா என்பதை நீதிபதியே தீர்மானிகின்றார். இதனால் பிள்ளைகளுக்கு பெற்றோரின் அரவணைப்பு கிடைக்காம போவதுடன் அவர்கள் உள ரீதியாகவும் பாதிப்படைகின்றனர். அனால் விவாகரத்து முடிவெடுபோருக்கு இதெல்லாம் மூன்றாம் பட்சமாகவே உள்ளது.
கணவன் மனைவிக்கிடையில் ஏற்படுகின்ற பிணக்குகள் வெகுதூரம் செல்லுமானால் அது அவர்களின் பிள்ளைகளின் கல்வி, எதிர்காலம் ,ஆரோக்கியம், மனநிலை என்பவற்றில் பாதிப்புகளை ஏற்படுத்தும் . அதுமட்டுமின்றி ஆரோக்கியம் பிள்ளைகளின் உரிமைகள் பாதிக்கபடுவதுடன் அப்பிள்ளைகள் எதிர்காலத்தில் பல்வேறு விதமான பிரச்சினைகளுக்கு முகங்கொடுத்து சீரழிவுக்குள்ளாக வேண்டியேற்படும். எனவே சுமுகமான முறையில் சட்டத்தை நாடாது பிரச்சினைகளை தீர்த்து கொள்ள முயற்சிப்பதே சிறந்தது.
பிரச்சினைகளை தீர்ப்பதற்கு
குடும்பத்தில் கணவன் மனைவிக்கிடையில் உள்ள "நான்" என்ற கர்வத்தை குறைத்தாலே பல விவாகரத்து வழக்குகளை தவிர்த்து விடலாம். இதுபோல் ஒருவருக்கொருவர் விட்டு கொடுக்கும் தன்மை குழந்தைகளின் எதிர்காலம், திருமண பந்ததிற்கான மரியாதையை கொடுத்தல் போன்றவற்றை இருவரும் கடைபிடித்தால் விவாகரத்து பிரச்சினையை குறைக்கலாம். அத்துடன் கலாசாரத்தையும் பாதுகாக்க முடியும்.
விவாகரத்துகளை தவிர்க்க விட்டுகொடுக்கும் மனப்பான்மையே ஒரே வழியாக உள்ளது. கணவன்,மனைவி இருவரும் ஒருவருக்கொருவர் விட்டுகொடுத்து வாழ பழகிக்கொள்ள வேண்டும். ஒருவர் மற்றயவரின் உணர்வுக்கு மதிப்பளிக்க வேண்டும். இருவருக்கும் ஏற்படும் சின்ன சின்ன பிரச்சினைகளை மனம் விட்டு பேசிதீர்த்து கொள்ள வேண்டும். கணவன் மனைவி இருவரிடையே மூன்றாவது நபர் தலையிடுவதை தவிர்க்க வேண்டும். குடும்பத்தின் அந்தரங்க விடயங்களை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ள கூடாது.
கணவன் மனைவியின் குடும்பத்தை பற்றியோ மனைவி கணவனின் குடும்பத்தை பற்றியோ விமர்சிக்க கூடாது. தரக்குறைவாக பேசக்கூடாது. கணவன், மனைவி உறவு என்பது உடலுறவுடன் மடுப்பட்டதல்ல அதற்கும் மேலாக பல விடயங்கள் உள்ளன. கணவன் மனைவிக்கிடையில் கோபங்கள் வரலாம். ஆனால் ,அவை வெறுப்பாக மாறிவிட கூடாது. இவ்வாறன நடைமுறைகளை பின்பற்றினால் விவாகரத்தை தவிர்க்கலாம் என்கின்றனர் உளவியல் நிபுணர்கள்.
எனவே விவாகரத்து கூறி நிற்கும் தம்பதியர்களே சற்று கவனத்தில் இதை எடுத்து கொண்டு ஆயிரம் காலத்து பயிரான மணவாழ்க்கை அழியலாமா???? சிந்தியுங்கள். விவாகரத்தை நாடாது சுமூகமாக உங்கள் பிரச்சினைகளை இருவரும் மனம் விட்டு பேசி கருத்து ஒருமித்து விட்டு கொடுத்து வாழுங்கள். இதனால் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்பட்ட உங்கள் திருமண வாழ்க்கை அழகாக பூத்து குலுங்கி மணம் வீசும்.
No comments:
Post a Comment