பாடசாலைகளில் முதலாம் வகுப்பில் பிள்ளைகளைச் சேர்ப்பது தொடக்கம் பல்கலைக்கழக அனுமதியைப் பெற்றுக் கொள்வது வரை நடைமுறையிலுள்ள ஏற்பாடுகள் தொடர்பாகப் பரந்தளவில் பெற்றோர்கள், மாணவர்கள் கல்விச் சமூகம் மத்தியில் அதிருப்தி தெரிவிக்கப்படுகிறது.
தமது பிள்ளைகளுக்கு எப்பாடுபட்டாவது சிறந்த கல்வியை வழங்கவேண்டுமென்ற எதிர்பார்ப்பையும் முயற்சியையும் கொண்டுள்ள பெற்றோர்கள் பலர், திறந்த பொருளாதாரத்தின் விளைவாக ஏற்பட்டுள்ள கடும் போட்டித் தன்மை கல்வித் துறைக்குள்ளும் ஆழமாக ஊடுருவியிருப்பதால் திக்கு முக்காடுவதை காணமுடிகிறது.
உள்ளூர் பாடசாலைகளை, பல்கலைக்கழகங்களை விட தனியார் பாடசாலைகள், சர்வதேசப் பல்கலைக்கழகங்கள் கல்வித்துறையை அதிகளவுக்கு ஆக்கிரமித்துக் கொண்டிருப்பதைக் காணமுடிகிறது.
மாலபே மருத்துவக் கல்லூரிக்கு எதிராக அண்மைக்காலமாக இடம்பெற்றுவரும் எதிர்ப்புப் போராட்டம் யாவரும் அறிந்ததொன்றாகும். அக் கல்லூரியினால் வழங்கப்படும் பட்டத்தை அங்கீகரிக்கப் போவதில்லையென்று இலங்கை மருத்துவப் பேரவை அறிவித்திருந்தமை எதிர்ப்புக் குரலுக்கான சிறிய உதாரணமாகும். உயர் கல்வித் துறையானது கேள்விக்குரிய தகைமையைக் கொண்டிருக்கின்றது என்பதே இங்குள்ள முக்கியமான விடயமாகும். இத்தகைய கல்வி நிறுவனங்களில் கற்கும் மாணவர்களை கேட்டால் தங்களுக்கு நல்ல வேலை கிடைக்குமா என்பது தொடர்பான சந்தேகத்தை வெளிப்படுத்துகின்றனர்.
கல்வி முறைமையில் ஏதோவொரு மாற்றத்தை மேற்கொள்ள வேண்டிய தேவையிருப்பதை அநேகமாக யாவரும் ஏற்றுக் கொள்கின்றனர். ஆனால் அவ்வப்போது ஆட்சிக்கு வரும் அரசாங்கங்கள் இந்த விடயத்தில் அதிகமாக செய்வதில்லை. கல்வித்துறைக்காக செலவிடப்பட்டும் பணம் தொடர்பாக அதிகளவுக்கு கேள்வியும் எழுப்பப்படுவதில்லை. உண்மையில் இந்த விடயம் அரசியல் ரீதியாக பிளவுபட்ட விவகாரமல்ல. சரியான கொள்கைகள், மறுசீரமைப்புகளே கல்வித்துறைக்கு அத்தியாவசிய தேவையாக உள்ளது.
உயர் கல்வித்துறையைப் பொறுத்தவரை சிறந்த பல்கலைக்கழகங்கள் நாட்டில் இருக்கின்றபோதிலும் க.பொ.த.உயர்தரத்தில் சித்தியடையும் இலட்சத்துக்கு மேற்பட்ட மாணவர்களில் ஐந்திலொரு பகுதியினருக்கே பல்கலைக்கழக அனுமதி கிடைக்கின்றது. மீதிப்பேருக்கு என்ன நடக்கிறது? தனியார் "வர்த்தக'க் கல்வி நிலையங்களில் தொழில் நுட்பக் கல்வியை கற்க வேண்டிய நிலைமைக்கு இந்த மாணவர்களில் பெரும்பாலானோர் தள்ளப்படுகின்றனர். ஆனால் அதற்கான நிதி வசதி உள்ளதா? என்பதே இங்குள்ள முக்கியமான கேள்வியாகும். அதேவேளை பண வசதி படைத்த மாணவர்கள் இந்தத் தனியார் கல்வி நிறுவனங்களில் கற்கை நெறிகளைப் பூர்த்தி செய்துள்ளபோதிலும் வேலை வாய்ப்பை பெற்றுக் கொள்வதென்பது மிக நெருக்கடியான விடயமாகக் காணப்படுகிறது.
கல்வித்துறையை வர்த்தக மயமாக்குவதற்கு எந்த விதத்திலும் அரசாங்கம் அனுமதிக்கக் கூடாது. கொள்கை, தரம் என்ற உணர்வுகள் கல்வித்துறையைப் பொறுத்தவரை தேவைப்படுகிறது. தனியார் கல்வி நிறுவனங்களை ஆரம்பிக்க "நிதிவசதி' இருந்தால் மாத்திரம் போதும் என்ற எண்ணப்பாட்டுக்கு அப்பால் அத்தகைய கல்வி நிறுவனங்களை ஆரம்பிப்போரின் தகைமையை மதிப்பிட்டு அங்கீகாரம் வழங்குவது இங்கு மிக முக்கியமானதாகும்.
தனியாகப் பணம் சம்பாதிப்பதை மட்டுமே இலக்காக இந்த நிறுவனங்கள் கொண்டுள்ளனவா என்பதை கணிப்பீடு செய்வதற்கான அளவுகோல் இங்கு தேவைப்படுகிறது. இதற்கான பொறுப்பு கல்வி, உயர் கல்வி அமைச்சுகளை பொறுத்த விடயமும் பொறுப்புமாகும். தனியார் கல்வி நிறுவனங்களின் தரத்தை நிர்ணயம் செய்து அவற்றின் சேவையை தொடருவதா இல்லையா என்பது பற்றி தீர்மானிக்கும் சட்ட ரீதியான கடப்பாட்டை கல்வி அமைச்சு கொண்டிருக்க வேண்டும்.
கல்வித்துறையில் அதிகளவு கரிசனை கொண்டவர்களாக இலங்கையர்கள் உள்ளனர். உலக நாடுகளிலேயே சிறப்பான கல்வி முறைமை இருப்பதாக அரசியல் தலைவர்கள் அடிக்கடி கூறுவதையும் கேட்கமுடிகிறது. ஆனால் மாணவர் சமூகம் கல்வித் துறையில் சமவாய்ப்பைப் பெற்றுக் கொள்வதற்குத் தேவையான நடவடிக்கைகளை அரசாங்கம் மேற்கொள்ள வேண்டும். கல்வித்துறைக்கு தேவைப்படும் மறுசீரமைப்புக்காக ஆர்ப்பாட்டங்களையும் போராட்டங்களையும் நடத்துவதிலும் பார்க்க நியாயமான முறையில் தீர்வைக்காண்பதற்கு அரசுக்கு உரிய ஆலோசனைகளையும் சிபார்சுகளையும் கல்விச்சமூகம் முன்வைக்க வேண்டும். அரசாங்கமும் எந்தவிதமான அரசியலுக்கும் இந்தவிடயத்தில் இடமளிக்காமல் கல்விச் சமூகத்தின் ஆலோசனைகளைப்பெற்று மறுசீரமைப்பை துரிதப்படுத்த வேண்டும்.
கல்வியானது வியாபாரமாக்கப்படாமல் கடிவாளம் இடுவதே உடனடித் தேவையாகும்.
No comments:
Post a Comment