Thursday, October 20, 2011

மக்களை நிலைகுலையவைக்கும் வாழ்க்கைச் செலவு அதிகரிப்பு





அரசாங்கத் தலைவர்கள் பிரமாண்டமான அபிவிருத்தித் திட்டங்களைப் பற்றியும் இலங்கையை ஆசியாவின் அதிசயமாக்கும் தங்களது கனவு பற்றியும் பேசிக் கொண்டிருக்கின்ற அதேவேளை, நாட்டு மக்களோ கூரையைப் பிரித்துக் கொண்டு வானளாவ உயர்ந்து கொண்டிருக்கும் வாழ்க்கைச் செலவினால் நிலைகுலைந்து போயிருக்கிறார்கள். மூன்று தசாப்தங்களாக நீடித்த போரை முடிவுக்குக் கொண்டுவந்து நாட்டில் அமைதியை ஏற்படுத்தியதாக அரசாங்கம் பெருமை பேசுவதிலேயே காலத்தைக் கழித்துக் கொண்டிருக்கின்ற அதேவேளை, மக்களோ அதே அமைதியின் விளைபயன்களைப் பொருளாதார ரீதியில் அனுபவிக்க முடியாத நிலையில் அமைதியின் அர்த்தமற்ற தன்மை குறித்து விரக்தியுடன் பேசிக் கொண்டிருப்பதைக் காணக்கூடியதாக இருக்கிறது.

வெறுமனே தேங்காய்ச் சம்பலுடன் மூன்று வேளையும் சோற்றையோ பாணையோ சாப்பிடுவதென்பதே பல குடும்பங்களைப் பொறுத்தவரை கட்டுப்படியாகாத காரியமாக மாறியிருக்கும் நிலையில் வாழ்க்கைச் செலவின் இடையறாத அதிகரிப்பை ஓரளவுக்கேனும் கட்டுப்படுத்துவதற்கு உருப்படியான நிவாரண நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு வக்கற்றதாக இருக்கும் அரசாங்கம் பொருளாதார நெருக்கடியில் இருந்து மக்களின் கவனத்தைத் திசை திருப்புவதற்காக வேறு பிரச்சினைகளை பூதாகாரமாக ஊதிப்பெருப்பித்துக் கொண்டிருக்கிறது.

ஒவ்வொரு வாரமும் ஏதோஒரு அத்தியாவசியப் பாவனைப் பொருளின் விலை அதிகரிக்கப்பட்ட வண்ணமேயிருக்கிறது. கடந்த சில வாரங்களுக்கிடையில் சமையல் எரிவாயுவின் விலை, எரிபொருட்களின் விலை, பால்மா வகைகளின் விலை, கோதுமை மா மற்றும் பாணின் விலை அதிகரிக்கப்பட்டதைக் காணக்கூடியதாக இருந்தது.

எரிபொருட்களின் விலை அதிகரிப்பு இயல்பாகவே வேறுபல அத்தியாவசியப் பாவனைப் பொருட்களின் விலைகளையும் சேவைகளுக்கான கட்டணங்களையும் அதிகரிக்கச் செய்திருக்கிறது. கோதுமை மாவையும் பாணையும் பொறுத்தவரை அவை எமது நாட்டு மக்களின் முக்கியமான உணவுப் பொருட்கள் அல்ல என்ற வாதத்தையே பாவனையாளர் பாதுகாப்பு அதிகார சபை முன்வைக்கிறது. கோதுமை மாவினதோ பாணினதோ விலைகள் அதிகரிப்பின் விளைவாக மக்களுக்கு ஏற்படுகின்ற கஷ்டநிலைக்கான பொறுப்பில் இருந்து தப்பிக் கொள்ளும் சூழ்ச்சித்தனமான நோக்குடனேயே இந்தவாதம் முன்வைக்கப்படுகிறது. ஆனால், கோதுமை மாவும் பாணும் எமது நாட்டு மக்களில் அதிகப் பெரும்பான்மையானவர்களின் அன்றாட முக்கிய உணவுப் பொருட்கள் என்பதே உண்மையான நிலையாகும். அடுத்து வரும் நாட்களில் பஸ் கட்டணங்கள் அதிகரிக்கப்படக்கூடிய அறிகுறிகள் தாராளமாகவே தெரிகின்றன.

தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கம் பஸ் கட்டணங்களை 15 சதவீதத்தால் அதிகரிக்க அனுமதி தருமாறு போக்குவரத்து ஆணைக்குழுவிடம் கோரிக்கை விடுத்திருக்கிறது. ஆணைக்குழுவின் அனுமதி கிடைக்கிறதோ இல்லையோ கட்டணங்களை அதிகரித்தே தீரப்போவதாக தனியார் பஸ் உரிமையாளர் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன அச்சுறுத்தல் வேறுவிடுத்திருக்கிறார். ஒட்டுமொத்தத்தில் மக்கள் மீது மேலும் மேலும் பொருளாதாரச் சுமை ஏற்றப்படுவதைத் தடுப்பதற்கான திராணியற்றதாக அரசாங்கம் இருக்கிறது. கட்டுப்படியாகக் கூடிய விலைகளில் மக்களுக்கு அத்தியாவசியப் பொருட்கள் கிடைக்கச் செய்வதை உறுதிப்படுத்த முடியாத நிலையில் இருக்கும் அரசாங்கம் தேசாபிமானத்தை அளவுக்கு அதிகமாக மக்களுக்கு போதித்துக் கொண்டிருக்கிறது. அதற்கு இறுதியாகக் கிடைத்த வாய்ப்புத்தான் ஐக்கிய நாடுகள் நிபுணர் குழுவின் அறிக்கை. அந்த அறிக்கைக்கு எதிராக உச்சத் தொனியில் மக்கள் மத்தியில் பேசிக் கொண்டு, ஐ.நா.செயலாளர் நாயகத்துக்கு பதில் அனுப்புவதற்கான நடவடிக்கைகளை மறுபுறத்தில் அந்தறங்கமாக முன்னெடுத்துக் கொண்டிருக்கிறது. மக்களைத் தொடர்ந்து ஏமாற்றலாமென்று அரசாங்கம் நினைக்கிறது. ஆனால், நிச்சயமாக நிலைமை மாறியே தீரும்!

No comments:

Post a Comment