Thursday, October 20, 2011

விநோதமான ஆய்வு





தமது சொந்த அலுவல்கள் காரணமாக அலுவலகங்களுக்கு வராமல் இருந்துவிட்டு மறுநாள் வரும் போது உடல்நிலை சரியில்லாததால் வேலைக்கு வரவில்லையென பொய் கூறுபவர்கள் தொடர்பான விநோதமான ஆய்வொன்று மேற்கொள்ளப்பட்டு அதன் முடிவுகளும் தற்போது வெளியிடப்பட்டுள்ளன. அலுவலகங்கள், தொழிற்சாலைகளின் சிரேஷ்ட அதிகாரிகளைக் கொண்ட "குரோனஸ்' என்ற அவுஸ்திரேலிய நாட்டைச் சேர்ந்த அமைப்பொன்றே இந்த ஆய்வை சீனா, இந்தியா, அவுஸ்திரேலியா, பிரான்ஸ், பிரிட்டன், மெக்ஸிக்கோ, அமெரிக்கா ஆகிய நாடுகளிலுள்ள அலுவலகங்கள், தொழிற்சாலைகளில் மேற்கொண்டு தனது முடிவினை பட்டியலிட்டு அறிவித்துள்ளது.
இந்த அமைப்பின் ஆய்வின்படி தமது சொந்த அலுவல்களுக்காக அலுவலகங்கள், தொழிற்சாலைகளுக்கு வராமல் இருந்துவிட்டு உடல் நிலை சரியில்லை அதனால் வேலைக்கு வரவில்லையெனக் கூறுவதில் சீனர்களே முதலிடம் பிடித்துள்ளனர். சீனர்கள் பெறும் விடுமுறைகளில் 71 சதவீதமானவை பொய்களைக் கொண்டவையாகவே உள்ளன. இதேபோன்று இரண்டாவது இடத்தைப் பிடித்த இந்தியர்களின் விடுமுறைகளில் 62 சதவீதம் பொய்யானவையாகவும் மூன்றாவது இடத்தைப் பிடித்த அவுஸ்திரேலியர்களின் விடுமுறைகளில் 58 சதவீதம் பொய்யான காரணங்களைக் கொண்டதாகவும் அமெரிக்கா 52 சதவீதம், பிரிட்டன் 43 சதவீதம், மெக்ஸிக்கோ 38 சதவீதம், பிரான்ஸ் 16 சதவீதமென அடுத்தடுத்த இடங்களைப் பிடித்துள்ளன.
இவ்வாறு பொய்க்காரணங்களைக் கூறி விடுமுறை எடுப்பதற்கு சொந்த அலுவல்கள், பணிப்பளு பணிப்பளு தொடர்பான மன அழுத்தங்களைக் காரணமாகக் கூறியுள்ள "குரோனஸ்' அமைப்பு இதனைத் தவிர்க்க தொழிலாளர்களுக்கு வேலை செய்ய இலகுவானபடி பிரித்துக் கொடுக்கலாம். ஊதியம் அல்லாத விடுமுறை எடுக்க அனுமதிக்கலாம். வீட்டிலிருந்து செய்யக்கூடிய வேலை இருந்தால் கொடுக்கலாமெனவும் பரிந்துரைத்துள்ளது. எமது நாட்டில் இவர்களையெல்லாம் தோற்கடிக்கக்கூடிய வீர,தீரர்கள் உள்ள நிலையில் இந்த ஆய்வில் இலங்கையை உள்ளடக்கவில்லை என்பதே எமக்குள்ள பெரிய கவலை. இல்லாதுவிட்டால் எமது நாடும் இந்தப் பட்டியலில் முன்னுரிமை பெற்றிருக்கும் என்பதில் எந்தவித சந்தேகமும் கொள்ளத் தேவையில்லை.
இலங்கையைப் பொறுத்தவரையில் தனியார் நிறுவனங்களை விடவும் அரச நிறுவனங்களிலேயே இந்தப் பொய் மன்னர்கள் அதிகளவில் உள்ளனர். இவர்கள் அலுவலகங்களுக்கு "கட்' அடிப்பதில் கைதேர்ந்தவர்கள். இவர்களின் இந்த நடவடிக்கைகளினால் அரச நிறுவனங்களின் பணிகள் பாதிக்கப்படுகின்றனவோ இல்லையோ பொதுமக்கள் மிக மோசமாகப் பாதிக்கப்படுகின்றனர். இதனால் குறித்த காலத்திற்குள் தமது பணிகளை முடிக்க முடியாத காரணத்தினாலேயே இலஞ்சம் கொடுத்தாவது தமது பணிகளை முடித்துவிட வேண்டுமென்ற தவறான பாதைக்குச் செல்கின்றனர். இலங்கையில் ஊழல் பெருகுவதற்கு அரச நிறுவனங்களில் இடம்பெறும் அளவுக்கதிக விடுமுறைகளும் ஒரு காரணமென்பதனை மறுத்துவிட முடியாது.
எமது நாட்டில் அரச நிறுவனங்களில் உள்ள கட்டுப்பாடுகளை விடவும் தனியார் நிறுவனங்களில் கடும் கட்டுப்பாடுகள் உள்ளதனாலேயே அவை திறம்படச் செயற்படுகின்றன. ஆனாலும் இங்கு கூட "தண்ணி' காட்டக்கூடிய ஊழியர்கள் இருக்கின்றனர் தான். தனியார் நிறுவனங்களைப் போன்ற கட்டுப்பாடுகளை அரச நிறுவனங்களிலும் அமுல்படுத்தினால் மக்களுக்கு சிறந்த சேவைகளை வழங்க முடிவதுடன் இலஞ்சத்தை ஓரளவுக்கேனும் குறைக்க முடியும். உலக அமைப்புகள் மேற்கொள்ளும் இவ்வாறான ஆய்வுகளில் இலங்கையை உள்ளடக்காதது நாம் செய்த புண்ணியமா அல்லது பாவமா என்பதுதான் தெரியவில்லை.

No comments:

Post a Comment