Wednesday, March 14, 2012

எப்படி வாழ வேண்டும்?



மனிதன் எப்படி வாழ வேண்டும்? தொல்லை கொடுப்பவனுக்கு தொல்லை கொடுத்து, ஊர் வம்புகளை உரக்க பேசி, அவனை பற்றி இவனிடமும் இவனை பற்றி அவனிடமும் பேசி, நமது வளர்ச்சியில் சந்தோஷத்தையும், மற்றவர்களின் வளர்ச்சியில் பொறாமையும் கொண்டு, மற்றவர்களை திட்டி, சபித்து, புறம் பேசி, அவதூறுகளையும், வேண்டாதவைகளையும் பேசி ஆர்ப்பாட்டம் செய்து வாழ்வதுதான் வாழ்வா...... 

நல்லவனாக, மனிதனாக, சாமியாராக, பெரியவனாக, உண்மையுள்ளவனாக நடித்து வாழ்வதுதான் வாழ்வா, ஒரு பண்பை கடைபிடிக்க முடியவில்லை என்பதற்காக அதை போல வேஷம் போட்டு வாழ்வதுதான் வாழ்வா?  மனிதன் எப்படி வாழ வேண்டும்?

ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுத்து, நான், என்னுடையது என்ற சுயநலத்தை மறந்து, இந்த சமுதாயம் நமக்கு கெட்டதை கற்றுக் கொடுத்தாலும் நாம் இந்த சமுதாயத்திற்கு நல்லதை கற்றுக்கொடுத்து,  மற்றவர்களை திருத்துவது எப்படி என்று யோசிக்காமல், தன்னை திருத்துவது எப்படி என்று யோசித்து, அன்போடு, பண்போடு, நல்ல எண்ணங்கள், சிந்தனைகள், பழக்கவழக்கங்களோடு வாழ்வதுதான் வாழ்வு
கடைபிடிக்க வேண்டிய எத்தனையோ நற்பண்புகள் இருக்கும் போது அவைகளையெல்லாம் விட்டு விட்டு வீண் காரியங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து, பன்றிகள் சாக்கடையிலே புரள்வதை போல வீண் செயல்களிலும், பேச்சுகளிலும் காலத்தை விரயம் செய்கிறோம் என்றால் நற்பண்புகளில் எந்த சுவையையும் உணர முடியவில்லை, உலக கவர்ச்சிகளே மனதை ஈர்த்துக் கொண்டிருக்கிறது என்றுதான் அர்த்தம்.


நல்ல பண்புகளின், செயல்களின், பேச்சுகளின் சுவையை உணராமல் அவைகளை கடைபிடிக்க முடியாது, நல்ல நண்பர்கள், ஆசிரியர்கள், முளையிலேயே அறிவூட்டுகின்ற பெற்றோர்கள் அமையாமல் போனால் மனிதன் வாழக்கூடாத வாழ்வையே வாழ்ந்துகொண்டிருப்பான். காலம் கடந்தாலும் பரவாயில்லை வீண் வாழ்க்கையை விட்டு விலகுங்கள், உங்களுக்கு நீங்களே குருவாக, நண்பனாக இருந்து சுய அறிவோடு ஒரு புதிய வாழ்வை உணருங்கள்.

சரியான கொள்கையோடு, உங்களை நீங்களே சுய பரிசோதனை செய்பவர்களாக, தீய குணங்களை வெல்ல தன் மனதோடு போராடுபவர்களாக, மனதை கட்டுபடுத்தியவர்களாக, எதற்கும் முட்டி மோதாமல் சகிப்பு தன்மை உடையவராக, கோபத்தை, ஆத்திரத்தை குறைத்து, கண்ணியத்தை கடைபிடிப்பவராக உங்களை புதிய உலகத்தை நோக்கி நகர்த்த ஆரம்பித்தீர்களென்றால் நற்குணங்களின் சுவையை உணர துவங்குவீர்கள், மனிதனாக வாழ்வது எப்படி என்பதை கற்றுக் கொள்வீர்கள்.

No comments:

Post a Comment